புதன், 30 நவம்பர், 2016

முறுக்கு அச்சு !

காலிங் பெல்லை அழுத்தியது புது இடத்து புது தோழி சொப்னாதான் எனத் தெரிந்துகொண்டு கதவைத் திறந்தாள் ராகிணி.

"முறுக்கு அச்சு இருக்குமா ? ரொம்ப நாளா செய்யணும்னு ஆசை" என்றாள் சொப்னா.

"இதோ எடுத்து வரேன், எடுத்துட்டு போ" என முறுக்கு அச்சை எடுத்து வந்து நீட்டினாள் ராகிணி.

"தொலைத்துவிட சான்ஸ் இருக்கு, அதனால இந்த தேன்குழல் அச்சை மட்டும் எடுத்துக்குறேன்" என ஒரு வில்லையுடன் முறுக்கச்சை எடுத்துச் சென்றாள் சொப்னா.

அடுத்த நாள் முறுக்கச்சு திரும்பி வந்தது, கூடவே சில அழகழகான‌ முறுக்குகளும் !

"அட இது நல்லாருக்கே, கஷ்ஷ்ஷ்டப்பட்டு சுடாமலே முறுக்குகள் வந்துள்ளதே !

சொப்னா மாதிரி இன்னும் நான்கு நம்ம ஊர் மக்கள் இந்த அப்பார்ட்மெண்டில் இருந்தால் போதும் போலவே, வருடம் முழுவதும் நம்ம முறுக்கச்சு சுற்றிச் சுழன்று முறுக்குகளைக் கொண்டுவந்து சேர்த்துவிடும் போலவே" என தனக்குள் நகைத்துக்கொண்டாள்.

துளி எண்ணெய் இல்லாமல், சும்மா கரகர மொறுமொறுவென, மிளகாய்த்தூள் சேர்த்து செவசெவவென செய்து தான் ஒரு ஆந்திரப் பெண் என்பதை காரசாரமாக நிரூபித்திருந்தாள் சொப்னா.

ராகிணி, "ரெசிபி சொல்லேன்" என்றதும்,

சொப்னா "கடலை மாவை நல்லா வறுத்து " என முடிக்குமுன்னே,

ராகிணி "என்னது கடலை மாவை வறுக்கணுமா?" என்று ஆச்சரியப்பட்டதும்,

சொப்னா " சரி சரி, நீ எப்போ ஃப்ரீயா இருப்பேன்னு சொல்லு, வந்து செஞ்சு காட்டிட்டுப் போறேன்" என்றாள்.

போகும்போது அப்படியே "அடுத்த தடவ ஓமப்பொடிதான் செய்யணும், சுதாவுக்கு(சுதாகர்) ரொம்ப பிடிக்கும்" என்றாள்.

இரண்டொரு நாளில் இருவருமாக சேர்ந்து ராகிணி வீட்டில் முறுக்கு மாவு தயார் செய்தனர்.

"மாவு ரொம்ம்ம்ப கெட்டியா இருக்கே, பிழிய வருமா ?" என்றாள் ராகிணி.

"கெட்டியா இருந்தாதான் எண்ணெய் குடிக்காம, மொறுமொறுவென வரும்" என்றாள் சொப்னா.

ராகிணி முறுக்கு அச்சில் மாவு போட்டு பிழிய முனைந்தாள். ம் ... ம் ....ம்..... ஒன்னும் முடியல.

"கொஞ்சம் தண்ணீர் தெளிச்சு பெசஞ்சுக்கிறேனே" என்றாள் ராகிணி. முறுக்கச்சு ஒடஞ்சிடுமோன்னு பயம்.

"நீ அந்தப் பக்கம் புடி, நான் இந்தப் பக்கம் புடிக்கிறேன், ரெண்டு பேருமா சேர்ந்து பிழியலாம், எங்க வீட்டிலும் நானும் சுதாவுமா சேர்ந்துதான் எல்லா முறுக்குகளையும் பிழிஞ்சோம்" என்றாள் சொப்னா.

ராகிணிக்குக் கண்களில் கண்ணீர் ஊற்று. பிழிந்தவர்களின் கஷ்டத்தை நினைத்து அல்ல, முறுக்கு அச்சை நினைத்துதான். உடைந்திருந்தால் ??

நல்லவேளை தேன்குழல் அச்சை எடுத்துச் சென்றாள். இதுவே ஓமப்பொடி அச்சாக இருந்திருந்தால் ??

இனி ஏதாவது சாக்குபோக்கு சொல்லி  ஓமப்பொடி வில்லையை மட்டும் கொடுக்கக் கூடாது என தனக்குத்தானே தீர்மானம் போட்டுக்கொண்டாள்.

சில நாட்களுக்குப்பின் மீண்டும் சொப்னா வந்து கதவைத் தட்டியதும் ஏற்கனவே போட்ட தீர்மானத்தை மனத்திரையில் ஒருமுறை ஓடவிட்டு உறுதி செய்துகொண்டு கதவைத் திறந்தாள் ராகிணி.

"சுதாவுக்கு வேல போச்சு, இன்னிக்கு நைட்டுக்கே நான் இந்தியா கெளம்புறேன், இங்க கொஞ்சம் வேல இருக்கு, அதையெல்லாம் முடிச்சிட்டு சுதா அடுத்தவாரம் கெளம்பிடுவார், கொஞ்சம் திங்க்ஸ் வாங்க வேண்டி இருக்கு, வரட்டுமா, பார்த்துக்கோ " ஒப்பித்துவிட்டு ஓடினாள் சொப்னா.

அதற்குமேல் அங்கு நின்றிருந்தால் இரண்டு பேருமே அழுதுவிடுவார்கள் போன்ற சூழல்.

"சொப்னா போகாதே, இந்தா முறுக்கச்சு, ஓமப்பொடி சுடு, இல்ல ஒடச்சுகூட போடு, ஏன்னு ஒரு வார்த்தை கேக்க மாட்டேன், ஆனா இங்கிருந்து மட்டும் போயிடாதே" என சொல்ல வேண்டும்போல் இருந்தது ராகிணிக்கு.

ஆனால் அவளால் சொப்னா அந்தத் தெருவில் சென்று மறையும்வரை நின்று பார்த்துக்கொண்டுதான் இருக்க முடிந்தது.

20 கருத்துகள்:

 1. :) முறுக்கு புழிஞ்ச கதய நினைச்சு சிரிக்கிற ஸ்மைலி போடுறதா...இல்ல சொப்னா திடீருன்னு ஊருக்கு கிளம்பினத நினைச்சு :( சோக ஸ்மைலி போடுறதா?!?! ஹ்ம்ம்ம்ம்...புரிலையே!!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இங்கு வந்த புதுசுல இப்படியான காட்சிகள்தான் நெறைய இருந்துச்சு மகி :(

   நீக்கு
 2. பதில்கள்
  1. வாங்க வாங்க, மீண்டும் இங்கே பார்த்ததில் சந்தோஷம் :) !

   நீக்கு
 3. அடடா! முறுக்கு முறுக்கிக்கும்னு பார்த்தா இப்படி உடைந்து போனதே!!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சகோ துளசி & கீதா,

   முறுக்கு எல்லாம் அந்நேரத்துக்குத்தான், பிறகு உடனே உடைந்து போகத்தான் செய்கிறது :)))

   நீக்கு
 4. கடலைமாவை நல்லா வறுத்து, சித்ராவீட்டுக் குழலை இரவல் வாங்கி வந்து எப்படி பிழிவது. சற்று சொல்லி விட்டுப் போகக் கூடாதா? கடலைமாவை சிவக்கவா லேசாகவா வறுக்க? நம் ஊர்களிலும் இரவல் வழக்கமும்,அதனுடன் இலவசங்களும் உண்டு. சில ஸமயங்களில் மறந்து விட்டால் ஸ்வாஹா ஆகிவிடும். ஹாஹாஹா. அன்புடன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. காமாக்ஷிமா,

   அழகாச் சொல்லிட்டீங்க, இரவல் போனால் இலவசமும் உண்டு, சமயங்களில் தொலைந்து & உடைந்து போவதும் உண்டு :)

   எப்படி பிழிவது. சற்று சொல்லி விட்டுப் போகக் கூடாதா? ______ வருவாங்க வருவாங்க, இப்போ கொஞ்சம் வேலை அதான், எந்நேரமும் ஒன்னாதான் சுத்துவாங்க அந்த ரெண்டு பேரும் :))

   நீக்கு
 5. பதில்கள்
  1. வேறு வழியில்லை, அவ்வளவுதான் !

   நன்றி தனபாலன்.

   நீக்கு
  2. பழைய டேஷ்போர்டை வரவைப்பது முடியாது... இது Google செய்த மாற்றம்...

   நீக்கு
  3. தனபாலன்,

   ஆமாம், ஆங்கில ப்ளாக்குகளில் நிறைய பேர் புலம்பியிருந்தனர். சரி வேறு ஏதும் தீர்வு இருக்குமா என்றுதான் உங்களிடம் கேட்டேன். மிக்க நன்றி தனபாலன்.

   நீக்கு
 6. இப்போ அச்சு எப்படி இருக்கு? வேலை செய்யுதா அக்கா?:-)
  மகன் பிறந்திருக்கார் அக்கா..2 மாதம் ஆகிறது.. அதனால் தான் முன்பு போல் வரமுடியவில்லை :-)

  பதிலளிநீக்கு
 7. அவங்க ஊருக்குப் போயிட்டதால நல்லாவே இருக்கு :))))

  மகிழ்ச்சியான செய்தி சொல்லி இருக்கீங்க அபி :) அம்மாவும், மகனும், மகளும் நலமாயிருப்பீங்க என்றே நினைக்கிறேன். முதலில் குழந்தைய கவனிங்க அபி, பிறகு மெதுவே வரலாம்.

  பதிலளிநீக்கு
 8. Feel sorry for ragini .. Hope ragini and her murukku achu are fine now 😃 ..

  Once my classmate took my record sheets ...I shed tears when I saw the way she folded it ..I didn't sleep that night

  பதிலளிநீக்கு
 9. ஆஹா, எனக்கும் இந்த ரெக்கார்ட், ஆல்பம் என ஏகத்துக்கும் அனுபவம் உண்டு அஞ்சு !

  பதிலளிநீக்கு
 10. :-) அம்மா வெகு பத்திரமாக வைத்திருப்பார்கள். உலாப் போய் வந்ததும் அச்சு நடுவில் குழிவாகி இருக்கும். அதுவும் நாள் ஆகி வந்தால் மாவு உலர்ந்து அச்சு வளையம் கழற்ற முடியாது. :-)

  ஒரு தடவை என் பொருள் ஒன்று இரவல் போய் வராமல் மாதங்கள் ஆகிய பின், எனக்குத் தேவை வரவும் போய்க் கேட்டேன். திரும்ப வந்த கேள்வி, "எந்த சைஸ் தட்டு வேணும்!" அவர்களதை நான் இரவல் வாங்கப் போனதாக எண்ணி விட்டார்கள். நான் புதுத் தட்டு வாங்கி ஆறேழு மாதம் கழித்து பழையது அவர்கள் வீட்டுக்கு எங்கிருந்தோ திரும்பியிருக்கிறது. இவர்கள் தங்களது இல்லை என்று திருப்பி அனுப்ப அவர்கள் மீண்டும் இவர்களுக்கு அனுப்பவென்று சில பரிமாற்றங்களின் பின் என்னிடம் வந்தது... சந்திரன் போல அழகாக; அத்தனை மேடு பள்ளம். :-) பிறகு இரவல் கொடுப்பதில்லை; கொடுத்தால், வராது என்னும் எண்ணத்துடனேயே சந்தோஷமாகக் கொடுத்தனுப்பி விடுவேன். இங்கு இரவல் கொடுத்தால் போனதை விட அழகாக, சுத்தமாக வந்து சேருகிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முதல் பத்தியில் இருப்பது :))) எங்க ஊரிலும் நடக்கும். படி, சல்லடை இதெல்லாம் செமயா அடிவாங்கி இருக்கும். முக்கியமா மாவு இடிக்கும் உலக்கை .... அதில் இருக்கும் இரும்பு வளையம் இரண்டும் ஒவ்வொன்றாய் காணாமல்போய், அது இல்லாமலே இடிப்பாங்க ..... இப்போ நெனச்சா சிரிப்புதான் வருது :)))

   தட்டு கதை சூப்பர். என்ன காரணத்தாலோ மறந்துதான் போயிடறாங்க :)

   நீக்கு