Tuesday, January 19, 2016

பாசச் சுவடுகள் !

'இன்று நண்பகல் வரை சூரியன் இருக்கும்'  என்று hourly weather ல் பார்த்து உறுதி செய்துகொண்டு, இன்று ஒரு நாளைக்கு மட்டும் (நம்புங்க, நெஜமாத்தான்) சாப்பிடும்போது சுட வைத்துக்கொள்ளலாம் என முடிவெடுத்து, கடகடவென காலையிலேயே சமையலை முடித்து, பத்து மணிக்கெல்லாம் பக்கத்தில் இருக்கும் ஒரு சிறிய பூங்காவுக்கு நடையைக் கட்டினேன்.

ஆமாங்க, எல் நினோ'வின் புண்ணியத்தால் நாங்களும் பல வருடங்களாகக் காணாத மழையை இப்போது விடாமல் கண்டு களிக்கிறோம். எங்கள் ஊரிலும் தொடர்ந்து மழை பெய்துகொண்டிருக்கிற‌து.

ஆனாலும் பல நாட்களாக சூரியனையேக் காணாமல் கொஞ்சம் கடுப்பாகவும் இருந்தது.  பெரிய பெரிய மரங்களின் அணி வகுப்பால் எங்கள் குடியிருப்பு வளாகம் கும்மிருட்டாகவே இருப்பதால்தான் இன்று பூங்காவுக்கு பயணம்.

பூங்காவில் dogs not allowed except on leash என்ற வாசகங்கள் ஆங்காங்கே தென்பட்டன. மனதினுள் ஒரு தைரியம், 'அப்பாடா' என்றிருந்தது.

ஆனால் பிறகுதான் தெரிந்தது, வாசகங்கள் பெயரளவுக்குத்தான் என்பது.  ஒருசிலர் மட்டும் leash உட‌னும், மற்றவர்கள் leash இல்லாமலும் அழைத்து வந்திருந்தனர்.

நானும் படு ஜாக்கிரதையாக‌ ஒரு மணி நேரத்திற்கு நடந்துவிட்டு, 'கொஞ்சம் குளிர் காய்வோமே' என்ற ஆசையில் அங்குள்ள picnic area இல் இருக்கும் ஒரு மர பெஞ்சில் அமர்ந்து அலைபேசியில் அப்போதைக்கு எடுத்த‌ குளிர்கால‌ புகைப் படங்களைப் பார்த்துக்கொண்டிருந்தேன்.

கொஞ்சம் போரடிக்கவும், 'சரி கிளம்பலாம்' என நினைக்கும்போதே சாலைக்கு அந்தப் பக்கம் ஒரு பையன் (சுமார் இருபது வயதிருக்கும்) தன் நாயுடன் நின்றுகொண்டிருந்ததைக் கவனித்தேன்.  நாய் நல்ல உயரம் & நீளம். லைட் ப்ரௌன் நிறம்.

உடனே எனக்குப் பட்டது அவன் கையில் லீஷ் இல்லை என்பது மட்டுமே.  யாராவாது நாயுடன் வந்தால் அதன் பிடி அவர்களின் கையில் இருக்கிறதா என்றுதான் முதலில் பார்ப்பேன்

''சரி இப்போது போகவேண்டாம், அவன் போன பிறகு போகலாம்', என நினைக்கும்போதே அந்த அரை ஆள் உயர நாய் மட்டும் சாலையைக் கடந்து இந்தப் பக்கம் வந்துவிட்டது.

அவனோ அங்கிருந்தே 'ஸ்நூப்பி ஸ்நூப்பி' என கத்திக்கொண்டிருந்தான். போக்குவரத்து அதிகமாக இருந்ததால் அவனால் சாலையை உடனே கடக்க முடியவில்லை.

எனக்கோ உதறல் எடுத்துவிட்டது.

'கடவுளே, சில நொடிகளுக்கு போக்குவரத்தை நிறுத்தி, அவனை இந்தப் பக்கம் அனுப்பிவிடு' என மனம் தானாக பிரார்த்தணையில் ஈடுப்பட்டது.

அடடா, நமக்கும் நல்ல மனசுதான் போலிருக்கிற‌து :)) இப்படி யார் யாருக்கெல்லாமோ வேண்டிக்கொள்கிறோமே !

கண்ணிமைக்கும் நேரத்தில் நாய் என்னைப் பார்த்துவிட்டது. நான் பயந்துபோய் பார்த்ததை,  அது 'பாசப் பார்வை' என தவறாக நினைத்தோ என்னவோ, என்னை நோக்கி ஒரே ஓட்டம்.

'இன்று மருத்துவரை பார்த்தே ஆக வேண்டும் என்பது தலையெழுத்துபோல, யாரால மாத்த முடியும் ? ' என்றெல்லாம் மனம் குழம்பியது

'ஓடினால் துரத்தும்' என்று கேள்விப்பட்டிருந்ததால் ஆடாமல் அசையாமல் அப்படியே இருந்தேன்.

இதுவரைக்கும் இல்லாத அனுபவம், என் மேல் ஏறி விளையாடி.....  அதன் முகம் என் கண்ணுக்கு நேரே !

கொஞ்ச தூரம் ஓடுவதும் .... 'அப்பாடா' என நினைக்கும்போதே :((    மீண்டும் ஓடி வந்து ..........( அதுவும் என்னிடம் ???  )   விளையாடுவதுமாக ,    எனக்கு  என்ன‌ செய்யிறதுன்னே புரியல !

ஒரு வழியா அந்தப் பையன் சாலையைக் கடந்து இந்தப் பக்கம் ஓடிவரவும், இதுவும் ஒரு வழியா என்னை ஆளை விட்டது.

"ஸாரி, ஸ்நூப்பி ஒன்னும் பண்ணாது, ஃப்ரெண்ட்லியாதான் இருக்கும்" என சொல்லிக்கொண்டே ஓடி மறைந்தான் அவன்.

பிறகுதான் கவனித்தேன், என் உடை முழுவதும் மண். அவற்றை தட்டிவிட முயன்றபோதுதான் தெரிந்தது, விரல்கள் முழுவதும் உமிழ்நீர் என்பது. முகம் & தலையிலும் ஈரம். அப்போதைக்கு பேப்பர் டவலால் துடைத்துக்கொண்டேன்.

'போதும் வெயில்' என கடுப்பாகி வீடு திரும்பும் வழியில் என் பெண்ணிடம் நடந்ததை சொல்லிக்கொண்டே வந்தேன்.

கடைசியில், " அது நெனச்சிருந்தா ஒரே கடி கடிச்சிருக்கலாம். அதுக்கு ஒருவேள சாப்பாடோ அல்லது பாசமா தடவிக் கொடுக்கவோ இல்ல‌, ஆனாலும் அது ஏன் இவ்வளவு பாசத்தக் காட்டணும் ? அதன் பாசம் அப்படியே மனசுல பதிஞ்சு போச்சு " என்றேன்.

பல வருடங்களாக என்னை நாய்க்குட்டி அல்லது பூனைக்குட்டி வாங்கச் சொல்லிக்கொண்டிருக்கும் மகள், இதுதான் சமயமென,  "ammaa, i thingk god is telling u to get a pet by having you experience these things.& then eventually you will start to like them",  என மெஸேஜ் அனுப்பினாள்.

அதனிடமிருந்து தப்பியாச்சு, இப்போ மகளிடமிருந்து தப்பிக்க வேண்டுமே, " வீடு வந்தாச்சு, முதல்ல ஷவர் எடுத்துட்டு, பிறகு பேசுறேன்" என்று எஸ்கேப் ஆனேன்.

19 comments:

  1. எனக்கும் இந்த பயம் இருக்கு சித்ரா. நானும் நாயை தூரத்தில் கண்டாலே leash இருக்கா என பார்ப்பேன். இருந்திட்டாலும் கூட அப்படியே நின்றுவிடுவேன்.என்னை கடந்து போகும் மட்டும் திக்திக் தான். நடந்து விடக்கூடாது என்று எதை நினைக்கிறோமோ அதுவா தேடி வரும் நம்மை....அவ்வ்வ்வ் (வாக்கிங் போகும் போது நாயோடு யாரும் வந்திடக்கூடாதே என்று நினைப்பேன்) உங்களுக்கு நல்ல அனுபவம்.அப்போ கூடிய விரைவில new person வரப்போறார்???
    இங்கு -15‍ -20 வரைக்கும் குளிர்.ஆனால் சூரியன் ஒவ்வொருநாளும் வாறார்.

    ReplyDelete
    Replies
    1. ப்ரியா,

      இதே மனநிலைதான் எனக்கும். தூரத்திலேயே பாதையை மாற்றிக்கொள்வேன். இருந்தாலும் என்னைப் பார்த்து 'உஃப் உஃப்'னு செய்யாமல் போகமாட்டாங்க இவங்கள்லாம். நாங்க ரெண்டு பேருமே இந்த விஷயத்துல ரொம்பஅஅஅ ஒற்றுமை, அதனால ..... புது ஆள் வர ..... சான்ஸே இல்ல :)

      குளிர் ‍‍‍‍‍-ல இருக்கா !! பனியில சூரியக் க‌திர்கள் பட்டு .... நெனச்சாலே அழகா இருக்கு. படம் எடுத்து போடுங்க ப்ரியா !

      Delete
  2. சில சமயங்களில் இப்படித்தான் நாய் பூனை என்று விலங்குகள் காரணமே இல்லாமல் நம் மேல் பாசம் பொழியும் என்று நினைக்கிறேன். எனக்கும் இது போல் நிகழ்ந்துள்ளது. ஆனால் நீங்கள் சொல்லும் அளவு மேலெல்லாம் ஏறவில்லை. பரவாயில்லை ஒன்றும் செய்யாமல் விட்டதே. அதற்கு நன்றி சொல்லுங்கள் சித்ரா.

    ReplyDelete
    Replies
    1. ஓ, உங்களுக்கும் இந்த அனுபவம் உண்டா :))) ஏற்கனவே சில அனுபவங்கள் உண்டு. ஆனால் இந்த தடவதான் இது மாதிரி. இப்போ நெனச்சாலும் பயமாதான் இருக்கு. நல்லவேள தப்பிச்சேங்க. கண்டிப்பா நன்றி சொல்லித்தான் ஆகணும். தினமும் ஜாலியா, உற்சாகமா காலையிலேயே 'வாக்' போகும் நான் இப்போ யோசிச்சு யோசிச்சு போகலைன்னா பார்த்துக்கோங்க !

      Delete
  3. ஹாஹா !! செம அனுபவம் தான் சித்ரா ! எனக்கு நாலுகால்ஸ் பார்த்தா பயமில்லை ..எங்கே போனாலும் கட்டி புடிச்சி பாசமழைதான் :) அதுங்களுக்கு தெரியும்ப்பா யார் பாசமா இருப்பாங்கன்னுஅவங்ககிட்டதான் தைரியமா கட்டிபிடிச்சி ஹாய் சொல்வாங்க .மகள் ஆசையை கன்சிடர் பண்ணுங்க

    ReplyDelete
    Replies
    1. ////// எனக்கு நாலுகால்ஸ் பார்த்தா பயமில்லை ..எங்கே போனாலும் கட்டி புடிச்சி பாசமழைதான் :)//// _____ எப்படி அஞ்சு இதெல்லாம் ? உண்மைய சொல்லட்டுமா ? நெஜமா பாசமெல்லாம் இல்ல, பயம்தான் இருந்துச்சு. கடிக்காம விட்டுச்சேன்னு கொஞ்சம் நன்றி அவ்வளவுதான்.

      இல்ல அஞ்சு, எங்க ரெண்டு பேருக்கும் மகள் ப்ரெய்ன் வாஷ் பண்ணிபண்ணி டயர்ட் ஆயிட்டா :) ஒருவேள, பின்னாளில் அவள் வளர்க்கலாம் :)))

      Delete
  4. 😍
    Big doggies are always friendly! Glad u had a nice meeting with snoopy! Time to get a pet as P said!! 😉😄

    ReplyDelete
    Replies
    1. ஓ அப்படியா ! அப்படின்னா இவ்ளோ நாளும் நான் மாத்தி நெனச்சிருக்கேன்.

      வீட்ல எங்க ரெண்டு பேரோட பலத்த ஆதரவு இருக்கறதால இப்போ யோசிக்கக்கூட முடியாது மகி :)

      Delete
  5. வாசிக்கும் உதறல் எடுக்கிறது....!

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா நீங்களும் எங்கள மாதிரிதானா :))

      Delete
  6. ஹாஹஹ் செம அனுபவம் போல! எங்கள் இருவர் வீட்டிலும் செல்லங்கள் - நாலுகால்- இருக்கின்றன.
    துளசி - பிற நாலுகால் என்றால் கொஞ்சம் தயக்கம் உண்டு. பயம் என்று இல்லாவிட்டாலும்..

    கீதா : பயம் இல்லை. கொஞ்சுவதுண்டு. எங்கு கண்டாலும் தடவிக் கொடுத்து. பாசத்தைக் கொட்டிவிடுவேன் அவைகளும் அப்படியே....நாம் பயந்து அவர்களை ஒருவேளைத் துன்புறுத்துவோமோ என்று அவர்களுக்குத் தோன்றினால்தான் தன்னைத் தற்காத்துக் கொள்ளக் கடிக்கும். இல்லை நாம் ஒன்றும் செய்ய மாட்டோம் என்று அவை தெரிந்து கொண்டால் இப்படித்தான் ஏறி விளையாடிவிட்டுச் செல்லும். நமது கண்ணிலிருந்து எந்த விலங்கும் தெரிந்து கொண்டுவிடும் நமது உடல் மொழி, மன மொழியை. அதனால் தான் விலங்குகளோடு பழக்கமில்லாதவர்கள் அவற்றின் கண்ணோடு கண் பார்க்கக் கூடாது என்று சொல்லுவதுண்டு. ஐ மீன் ஐ டு ஐ கான்டாக்ட். நல்ல அனுபவம்...இனி ஏதேனும் நாலுகால் வந்தால் உங்கள் கைகளை மூடி வைத்துக் கொள்ளாதீர்கள். திறந்து வைத்துக் கொள்ளுங்கள் அவர்களின் பார்வையில்...நம் கைகளில் ஒன்றும் இல்லை என்பதும் தெரிந்துவிடும் அவர்களுக்கு...
    உங்களுக்குப் பயம் இருந்திருந்தாலும் நாங்கள் ரசித்தோம் உங்கள் பதிவை..ஹிஹிஹி

    ReplyDelete
    Replies
    1. சகோ துளசி & கீதா,

      நானும் எப்படியெல்லாமோ பயப்படாத மாதிரிதான் இருப்பேன், ஹி ஹி தூரத்தில் இருக்கும்போது. கிட்டே வரவர ...... ரூட்டை நான் மாத்திக்குவேன் :))) ஆடு, கன்னுக்குட்டி, கோழி இதுக்கெல்லாம் பயப்படமாட்டேன் !

      மற்றவை தெரிந்தவை என்றாலும் இந்த ஐ டூ ஐ, கைகளை மூடாமல் திறந்து வைத்துக்கொள்வது இரண்டும் இப்போதான் கேள்விப்படுறேன். நன்றி கீதா & துளசி.

      Delete
  7. என்னால சிரிப்பை அடக்க முடியலை.. ஆனாலும் ரொம்ப பாசம் உங்க மேல அதுக்கு.. நானெல்லாம் பயப்படவேமாட்டேன்.. என் மகளும் நாய்க்கு பயப்பட மாட்டா.. மாறா 2 பேரும் பூனைக்கு பயப்படுவோம்.. அடுத்து மகள் கிட்ட தப்பிக்கிற வழிய பாருங்க..

    ReplyDelete
    Replies
    1. யாருக்காவது பயந்துதான் ஆகவேண்டும்போல :)))) நான் நம்ம ஊரு பூனைக்கு பயப்படமாட்டேன். ஆனால் இங்குள்ள பூனைகள் எல்லாம் பெருசு பெருசா பயமாத்தான் இருக்கும்.

      என்னால(வீட்டுக்காரருக்கும்) நெனச்சுகூட பார்க்க முடியாது. அதனால தற்போதைக்கு தப்பிக்க வழியில்லை அபி :))))

      Delete
  8. நான்கூட பயப்படும் வகையைச் சேர்ந்தவள்தான்,ஒன்றும் செய்யாதுஎன்று நாயைக் கிட்டே அழைத்து வந்தால் அது நம்மை, முகர்ந்து முகர்ந்து பார்க்கும். அப்போதுகூட ஓது என்ன செய்து விடுமோ என்ற உள்ளூர தரல்தான். உன் அனுபவம் ரஸிக்கும்படியும்,நேசஅனுபவமுமாக இருந்தது. அனுபவமும் அழகாக எழுத முடிந்தது ஸந்தோஷம். அன்புடன்

    ReplyDelete
    Replies
    1. ஆஹா, காமாக்ஷி அம்மாவும் பயப்படுவாங்களா :)))

      பயப்படாத மாதிரி எவ்வளவு நடித்தாலும் கண்டுபிடித்து ஒரு சத்தம் போடாமல் கடப்பதில்லை. எச்சரிக்கையாகத்தான் இருக்கவேண்டியுள்ளது. அன்புடன் சித்ரா.

      Delete
  9. ஹஹஹஹா...படிக்கும் போது ஒரே ரசனையான சிரிப்பு தான்...எனக்கு மட்டும் என்னவாம் பயம் தான். நாய்,பூனை - எல்லாம் பார்த்து அதுவும் தூரமாக....ரசிப்பேன் பக்கத்தில் ம்கூம்...நல்லா ரசனையாக எழுதியிருக்கீங்க சித்ரா....

    ReplyDelete
  10. ஹா ஹா நீங்களுமா :)))

    நன்றி உமையாள் !

    ReplyDelete