Saturday, March 30, 2013

'பயாலஜி' படுத்தும்பாடு_3

இந்த வருடம் மீண்டும் 'பயாலஜி' வந்துள்ளது.இம்முறை விருப்பப் பாடமாக எடுத்துப் படிக்கிறாள்.

சில‌ மாதங்களுக்குமுன் 'மூளை'யைப் பற்றி படித்துக்கொண்டிருந்தனர்.

ஒரு நாள் காலை திடீரென 'அம்மா இனி எனக்கு காலையில் cereal / சீரியல் வேண்டாம்' என்றாள்.

நான் பரவாயில்லையே,இந்த சீரியல் பழக்கத்தை எப்படி நிறுத்துவது என நினைத்திருந்தேன்.அவளாகவே நிறுத்திவிட்டாளே என எண்ணி 'இட்லி ஊத்தவா' என்றேன்.

'ஒரு ஆம்லெட்டும்,1/2 கப் பாலும் போதும்மா' என்றாள்.

'காலையிலேயே முட்டை சாப்பிடப்போறியா!' என்றேன்.

'முட்டையில் நிறைய புரோட்டீன் இருக்குமா,காலையில் புரோட்டீன் எடுத்துக்கிட்டா it will wake you up,மூளைக்கு நல்லது' என்றாள்.

'இதுக்கு சீரியலே பரவாயில்லை' என நினைத்துக்கொண்டேன்.

பின்ன என்னங்க, perfect omelet னு தேடித்தேடி எல்லாம் செய்து முடித்து,இப்போது தாளிக்கும் கரண்டி ஆம்லெட் செய்துகொண்டிருக்கிறேன்.

வீட்டுக்காரர் ஒரு இரண்டு நாட்கள் பொறுத்துப் பார்த்தார்.அடுத்த நாள் கேட்டேவிட்டார்.

'காலையிலேயே என்ன பன்ற' என்றார்.நான் விஷயத்தைச் சொல்லவும் சரியென்று விட்டுவிட்டார்.

ஆனாலும் அன்று மாலை இதைவைத்து மகளை ஓட்டப்போகிறார் என்பது மட்டும் புரிந்தது.

தினமும் மாலையில் இவர் ஆஃபீஸ் விட்டு வீட்டுக்கு வந்து உள்ளே நுழையும் முன்னமே இவள் 'you know what' என்று ஆரம்பித்து அன்று முழுவதும் நடந்ததை எல்லாம் ஒன்று விடாமல் தூங்கப் போகும்வரை சொல்லிக்கொண்டே இருப்பாள்.

அன்றும் அப்படித்தான்,எப்போதும்போல் பேச ஆரம்பித்தாள்.

கொஞ்ச நேரம் அவள் சொன்னதையெல்லாம் கேட்டுவிட்டு 'என்ன காலையிலேயே ஆம்லெட் சாப்பிற்றயாமே' என ஆரம்பித்தார்.

அவளும் சீரியஸாக விஷயத்தைச் சொன்னாள்.

உடனே இவர் ' நாங்க எவ்வளவோ முயற்சித்தும் முடியாமத்தானே விட்டுட்டோம்,இப்போ நீ ஆரம்பிச்சிருக்க‌,இனிமேலாவது நடக்குதான்னு பார்க்கலாம்'என்றார்.

அவ்வ்வ்வ் என இரண்டு கை விரல்களையும் அவரது முகத்தருகே கொண்டு சென்றாள்.பின்னர் என்பக்கம் திரும்பி 'அம்ம்மாஆஆ,அப்பாவுக்கு எல்லாமே ஜோக்தானா, எதையுமே சீரியஸா எடுத்துக்க மாட்டாரா' என்றாள்.

'இதையெல்லாம் சீரியஸா எடுத்துக்கிட்டா என் நிலை என்னாவது' என நினைத்து மனதிற்குள்ளேயே சிரித்துக்கொண்டேன்.
  ___________________   _  _  _  ___________________  _  _  _  _________________________  

8 comments:

  1. அம்மா... எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும்...!

    மூளையா...? மூலையா...?

    ReplyDelete
  2. தனபாலன்,

    திருத்திவிட்டேன்,முதல் வருகைக்கு மட்டுமல்லாமல்,சுட்டியமைக்கும் நன்றிங்க.

    ReplyDelete
  3. இந்த காலத்துப் பெண்களிடம் தாயார் நல்ல பெயர் வாங்குவது மிகவும் கடினம் என்று தொன்றுகிறது.....! கிளௌஸ் பத்திரமாக இருக்கிறதல்லவா?

    ReplyDelete
  4. Chellappa Yagyaswamy ஐயா,

    க்ளௌஸ் வாங்குவதற்கு பதிலாக மரக்கரண்டிகள் வாங்கியாச்சு.இன்னும் உபயோகத்தில் (மாவு கரைப்பதைத்தவிர) இருக்கின்றன.

    "இந்த காலத்துப் பெண்களிடம் தாயார் நல்ல பெயர் வாங்குவது மிகவும் கடினம் என்று தொன்றுகிறது" _____எனக்கு அப்படியொன்றும் தெரியலிங்க.முதல் பாராட்டே மகளிடமிருந்துதான் வரும்.அவள் சொல்லும் இந்த விஷயங்களையெல்லாம் ரசிக்கத்தான் தோன்றுகிறது.

    உங்கள் lastname ஐ தமிழில் எப்படி எழுதுவது எனத் தெரியாமல் அப்படியே copy&paste செய்துவிட்டேன். உங்கள் முதல் வரவுக்கும்,கருத்துக்கும் நன்றிங்க.

    ReplyDelete
  5. ஏட்டுச் சுரைக்காய் ஆம்லேட் சாபிட உதவும் போலிருக்கிறதே .
    எல்லா அப்பாக்களும் எல்லாவற்றையும் சீரியசாக எடுத்துக் கொண்டால் அம்மாக்கள் பாடு திண்டாட்டமாகி விடும் என்று போகப்போக உங்கள் மகளுக்குப் புரிந்து விடும்.

    அதென்ன கரண்டி ஆம்லேட் ?
    அருமையான மகள் புராணப் பதிவு. தொடர்ந்து படிக்க ஆவலாயிருக்கிறேன்......

    ReplyDelete
    Replies
    1. ராஜலக்ஷ்மி,

      இவர்கள் சாப்பாட்டின்மூலம் தீர்வு காண நினைப்பதில் மகிழ்ச்சியே. நாஆஆன் ஹைஸ்கூல் படிக்கும்போதே வல்லாரை மாத்திரை,தூங்காமல் விழித்திருந்து படிக்க மாத்திரைகள் சாப்பிடுவதாக நன்றாகப் படித்த பெற்றோரின் பிள்ளைகளே சொல்வார்கள்.

      ம்ம்ம்..எல்லா விஷயமும் தெரியும்.சமயங்களில் இவர்கள் செய்யும் குறும்புகளில் சில மனதில் நின்றுவிடுகின்றன.

      "எல்லா அப்பாக்களும் எல்லாவற்றையும் சீரியசாக எடுத்துக் கொண்டால் அம்மாக்கள் பாடு திண்டாட்டமாகி விடும்"____சரியா சொல்லிட்டீங்க.

      தினமும் ஓவ்வொரு விதமாக ஆம்லெட் செய்து பார்த்தேன்.தாளிக்கிற கரண்டியில் செய்த அன்று (எங்க பாட்டி இப்படித்தான் செய்வாங்க) 'இது சூப்பரா இருக்குமா' என்றதால் தற்சமயம் இதுவே தொடர்கிறது.வருகைக்கு நன்றிங்க.

      Delete
  6. ரசிக்கவைத்த பகிர்வுகள்..

    ReplyDelete
    Replies
    1. பதிவுகளை ரசித்ததற்கு நன்றிங்க.

      Delete